பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை

On this page

1. பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை

திருச்சிற்றம்பலம்

கட்டளைக் கலித்துறை

வேதியன் பாதம் பணிந்தேன், பணிந்துமெய்ஞ்ஞானமென்னுஞ்
சோதியென்பாலுற வுற்றுநின்றேற்கின்று தொட்டிதுவே
நீதியென்றான்; செல்வமாவதென்றேன்மேனினைப்புவண்டா
ரோதிநின் போல்வகைத் தேயிரு

பாலுமொழித்ததுவே.

உரை

வேதியன் - சத்தார்த்த லக்ஷியனாகிய இறைவனது
பாதம் - திருவடிகளை

பணிந்தேன் - வணங்கினேன்.

பணிந்து - பணிந்து (திருவருட்சமுகத்தில் நின்ற யான் அவனால் கடைக்கணிக்கப் பெற்றதனால்)

மெய்ஞ்ஞான மென்னுஞ் சோதி - மெய்யறிவென்னும் இயற்கை விளக்கமாகிய அவ்விறைவனது ஆண்பால் வடிவம் (சோதி என்பது சோதிப்பாலெனக் கொளற்பாலது.)

என்பாலுற - ஆன்மசத்தி விளக்கமாகிய எனது பெண்பாலிற் கலக்க

உற்று நின்றேன் - ஐக்கியானுபவம் பெற்று நின்றேன்.

(நின்றேற்)கு - அங்ஙனம் நின்ற என்னை இறைவன் மீட்டுங் கடைக்கணித்து

இன்று தொட்டு - இது பொழுது தொடங்கி

இதுவே - இவ்வனுபவ ஒழுக்கமே

நீதி யென்றான் - நீ அனுபவிக்கின்ற ஒழுக்கமாகுக என்று திருவாய் மலர்ந்தருளினன் (யானும்)

செல்வமாவ தென்றேன் - அடைதற்குரிய திருவருட்செல்வம் இங்ஙனமாவதென்று
அங்ஙனமே நின்றனன்.

மேல் - அதன் பின்னர்

நினைப்பு - இருவகைப் பாலினுங்கவர்பட நின்ற எனது நினைவு

வண்டாரோதி - வண்டு மொய்க்கின்ற இயற்கை மணம் வீசும் அளகத்தை உடையாய்

நின்போல் வகைத்து ஏ - இறைவனது அனுபவ விருப்பம் பற்றி வந்த தாபவிசேடத்தாற் பெண்பாற்குரிய நாணத்தை விடுத்துப் பலருங்கேட்கத் "தூது செல்லுதி" என்று என்னை வருந்தி ஏவுதலால் ஊக்க முதலியவுடைய ஆண்பாற்றன்மை அவையின்றிய நின்பெண்பாற்றன்மையிற் கலக்கப்பட்டு இருபாலும் ஒழித்து நின்ற நின் வண்ணம்போன்றதாய்

இருபாலும் - ஆண்பால், பெண்பால் என்னும் இருபாலினிடத்துஞ் செல்லுகை

ஒழித்தது ஏ - நீங்கிற்று.

ஆகலில் நீயும் புறத்தே என்னையொப்பாயாக.

இது சிவானந்தத்தை அகத்தே அனுபவித்த தோழி
புறத்தனுபவம் விரும்பிய தலைவியை அறிவுறுத்தியது.